கேஜ்ரிவால் இல்லத்தின் சிசிடிவி பதிவுகள் பறிமுதல் : ஸ்வாதி மலிவால் வழக்கில் டெல்லி போலீஸ் அதிரடி

ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மலிவால் தாக்குதல் வழக்கில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வீட்டில் இருந்து சிசிடிவி டிவிஆர்-ஐ டெல்லி போலீஸார் இன்று கைப்பற்றினர்.

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மலிவால். இவர் கடந்த 13ம் தேதி முதல்வர் கேஜ்ரிவாலை சந்திக்க, அவரது இல்லத்துக்கு சென்றார். அப்போது, முதல்வரின் உதவியாளரான பிபவ்குமார், தன்னை தாக்கியதாக டெல்லி போலீஸில் பின்னர் ஸ்வாதி மலிவால் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பிபவ் குமாரை நேற்று கைது செய்தனர். இதற்கிடையே இந்த விவகாரத்தில் ஸ்வாதி மலிவால், தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாகவும், அவர் முதல்வரை சந்திக்க அனுமதி பெறாததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் பிபவ் குமாரும் டெல்லி போலீஸில் ஏற்கெனவே பதில் புகார் அளித்துள்ளார்.

இச்சூழலில் முதல்வர் இல்லத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் இந்த விவகாரம் தொடர்பாக பதிவான 2 வீடியோக்களை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது. முதல் வீடியோவில் ஸ்வாதி மலிவாலுக்கும், பிபவ் குமார் உள்ளிட்ட முதல்வர் இல்ல பாதுகாவலர்களுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலும், இரண்டாவது வீடியோவில் ஸ்வாதி மலிவாலை, முதல்வர் இல்லத்திலிருந்து பெண் பாதுகாவலர்கள் வாயில் வரை அழைத்துச் சென்று வெளியே விடும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.

இந்த காட்சிகளில் ஸ்வாதி மலிவால் புகாரில் குறிப்பிட்டது போன்ற தாக்குதல் காட்சிகள் எதுவும் இல்லை. இந்நிலையில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வீட்டிற்கு இன்று சென்ற டெல்லி போலீஸார், அங்கிருந்த சிசிடிவி டிவிஆர்-ஐ கைப்பற்றி எடுத்துச் சென்றனர். இந்த நடவடிக்கை காரணமாக டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.