பிரதமர் நரேந்திர மோடி வடமாநிலங்களில் 5-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய கருத்துகள் கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதில் குறிப்பாக காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை புல்டோசர் கொண்டு இடித்து விடுவார்கள் என்று பேசினார்.
இந்த பேச்சு எதிர்க்கட்சியினர் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியின் இந்த பேச்சு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் கூறுகையில், புல்டோசர் அறம் என்பது உத்தரபிரதேச முதல்வரின் அடையாளமாக இருக்கலாம். ஆனால் காங்கிரசுக்கோ, இந்தியா கூட்டணிக்கோ இதில் முற்றிலும் உடன்பாடு கிடையாது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சட்டத்தை தவறாக பயன்படுத்துவது, மூன்றாம் தரமாக மலிவான முறையில் அரசியல் செய்வது, சட்டவிரோத சோதனைகள் நடத்துவது, அரசுத் துறைகளை பயன்படுத்தி பறிமுதல் செய்வது, தவறான முறையில் நபர்களை கைது செய்வது, காவல்துறை, சிறைத்துறை மரணங்கள் ஆகியவற்றிக்கு முடிவு கட்டப்படும் என உறுதியளிக்கிறேன்.
ராமர் கோவில் புல்டோசர் கொண்டு இடித்து அகற்றப்படும் என்ற இந்தியா கூட்டணியின் மீதான பிரதமர் மோடியின் தவறான குற்றச்சாட்டுக்கு இதுதான் எங்களது உறுதியான பதிலாகும் என்றார்.
அதேபோல் உத்தரபிரதேசத்தில் உள்ள பாரபங்கி என்ற இடத்தில் பிரதமர் மோடி பேசுகையில், புல்டோசரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை இந்தியா கூட்டணி கட்சியினர் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், முன்பு பிரசாரத்தின் போது பிரதமரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் பேசுகையில், பா.ஜ.க. 370 இடங்களில் இருந்து 400 இடங்கள் வரை பிடிக்கும் என தெரிவித்தனர். தற்போது காங்கிரஸ் ஆட்சி அமைத்து விடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் இருவரும் பேசும் போது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
புல்டோசர் அரசியலை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் அறிமுகம் செய்து வைத்தார். பா.ஜ.க. அரசுக்கு எதிராக விமர்சனங்களை கூறும் பொதுமக்களின் சொத்துகளை இடித்து அகற்றுவதற்காக பயன்படுத்தினர். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு கண்டித்த போதிலும் கூட புல்டோசர் அரசியலை அவர்கள் கைவிட தயாராக இல்லை. பிரதமர் மோடியின் புல்டோசர் அரசியல் குறித்த பேச்சு மிகவும் தரம் தாழ்ந்த ஒன்றாகும் என்றார்.