‘ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்கப் போகிறேன்’ – டெல்லியில் தெறிக்கவிடும் ராகுல் காந்தி

டெல்லியின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணிக்கே வெற்றி வாய்க்க, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

இந்தியா கூட்டணியின் இரு கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான வலுவான பிணைப்பின் அடையாளமாக, நடந்து வரும் மக்களவைத் தேர்தலில், டெல்லியில் ஆம் ஆத்மி வேட்பாளருக்கு தாம் வாக்களிப்பதாகவும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிப்பார் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

“கேஜ்ரிவால் காங்கிரஸின் பொத்தானை அழுத்துவார், நான் ஆம் ஆத்மியின் பொத்தானை அழுத்துவேன்” என்று டெல்லியின் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகோரிய டெல்லி சாந்தினி சௌக் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது ராகுல் காந்தி உறுதிபட கூறினார்.

டெல்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளிலும் தங்கள் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி பேசும்போது ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் பேசும்போது, இந்தியாவின் பிரச்சினைகள் குறித்தான விவாதத்திற்கு பிரதமர் மோடிக்கு மீண்டும் சவால் விடுத்தார். “பிரதமர் மோடியுடன் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன், ஆனால் அவர் வரமாட்டார் என்றும் உறுதியாக நம்புகிறேன்” என்று மோடியை சீண்டினார்.

முன்னதாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் மதன் லோகுர் மற்றும் அஜித் ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் ’இந்து’ என்.ராம் ஆகியோர் அண்மையில் ராகுல் காந்தி மற்றும் பிரதமருக்கு முக்கிய மக்களவைத் தேர்தல் பிரச்சினைகள் குறித்த விவாத மேடைக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதியிருந்தனர். அதற்கு தன் தரப்பில் ஒப்புதல் தெரிவித்த ராகுல் காந்தி, பிரதமர் மோடியும் விவாதத்திற்கு சம்மதித்தால் குரோனி கேபிடலிசம், பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், மற்றும் விவசாயப் பிரச்னைகள் குறித்து கேள்வி கேட்பேன் என்றார்.

“மோடி 22 பேருக்கு மட்டுமே வேலை செய்துள்ளார். சாந்தினி சவுக்கின் சிறு வணிகர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன், மோடி உங்களுக்கு என்ன செய்தார்? ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு மற்றும் பிற வரிகளால் சிறு வணிகங்கள் பாதிக்கப்பட்டன. அதானி மற்றும் அம்பானியின் கோடிக்கணக்கான கடன் தள்ளுபடி செய்யப்பட்டது” என்றும் ராகுல் காந்தி சாடினார்.