ஊருக்குள் புகுந்து ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை சிக்கியது : நெல்லை மக்கள் நிம்மதி

நெல்லை வேம்பையாபுரம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை இன்று அதிகாலையில் கூண்டில் சிக்கியது.

நெல்லை மாவட்டத்திலுள்ள பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ளன. அதேபோல், களக்காடு – முண்டந்துறை புலிகள் சரணாலயமும் இங்கு தான் உள்ளது. அத்துடன் யானை, கரடி, சிறுத்தை, காட்டுப்பன்றி, மான் உட்பட பல்வேறு வகையான வனவிலங்குகளும் உள்ளன. இந்த விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி மலை அடிவாரத்தில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் அவ்வப்போது உள்ளே புகுந்து விளைநிலங்களையும், கால்நடைகளையும் வேட்டையாடி வருகின்றன.

இந்நிலையில் விக்ரமசிங்கபுரத்தை அடுத்த வேம்பையாபுரம் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை சங்கர் என்பவர் வீட்டில் கட்டியிருந்த ஆட்டை சிறுத்தைத் தூக்கிச்சென்றது. இதே போல் விக்ரமசிங்கபுரம் அருகே அனவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவரது ஆட்டையும் சிறுத்தைக் கடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் வனச்சரகர் சத்தியவேல் தலைமையிலான வனத்துறையினர் மோப்ப நாய் மூலம் சிறுத்தையைத் தேடி வந்தனர். அத்துடன் சிறுத்தையை இரும்புக்கூண்டுகளை வைத்து பிடிக்க முடிவு செய்தனர்.

அதன்படி வேம்பையாபுரம், அனவன்குடியிருப்பு பகுதிகளில் நடமாடிய சிறுத்தையைப் பிடிப்பதற்காக, அங்கு இரண்டு இடங்களில் இரும்புக்கூண்டுகளை வைத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், வேம்பையாபுரம் பகுதியில் வைக்கபபட்டிருந்த கூண்டில் சிறுத்தை இன்று அதிகாலை சிக்கியது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.