மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி வழங்கப்படும் : மக்கள் நல்வாழ்வுத்துறை

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை, இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு எழுதியுள்ள கடிதத்தில்;

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பின் அடிப்படையில், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ்வரும் அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலிய உதவியாளர் தரம்-2 மற்றும் கடைநிலை ஊழியர்களான மருத்துவமனை பணியாளர் மற்றும் துப்புறவு பணியாளர்களுக்கு கீழ்க்காணுமாறு பணி நேரம் நிர்ணயித்து ஆணை வெளியிட உத்தேசித்து, அவ்வாறே ஆணையிடுகிறது.

காலை 6 – பகல் 1 மணி வரை, பகல் 1 இரவு 8 மணி வரை, இரவு 8 காலை 6 மணி வரை என்கிற முறையில் சுழற்சி பணியாக வழங்கவும். மேலும். பணியில் உள்ள செவிலிய உதவியாளர் தரம்-2 மற்றும் கடைநிலை ஊழியர்களான மருத்துவமனைப் பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர்களில் 50 சதவீதம் பேர் முதல் சுழற்சியிலும், 25 சதவீதம் பேர் இரண்டாம் சுழற்சியிலும் மற்றும் 25 சதவீதம் பேர் மூன்றாம் சுழற்சியிலும் பணியமர்த்தப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.