தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில், வெள்ளம் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் வனத்துறையினரிடம் அருவிகளை ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகள் உலகப் புகழ் பெற்றவையாகும். இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களின் போது இந்த அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் என்பதால், இதில் குளித்து மகிழ்வதற்காக ஏராளமானோர் வருகை தருகின்றனர். கடந்த மூன்று மாத காலத்திற்கும் மேலாக மழை இன்றி காணப்பட்டதால், அருவிகள் தண்ணீர் வரத்து இன்றி இருந்தது. இதனால் குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனிடையே கடந்து சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. பழைய குற்றாலம் அருவி, குற்றாலம் அருவி மற்றும் ஐந்தருவி ஆகிய அருவிகளில் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இதனிடையே நேற்று பழைய குற்றாலம் அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்தார். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
3 அருவிகளில் ஐந்தருவி மட்டும் தற்போது வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. நீர்வரத்து கண்காணிப்பு மற்றும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் பிரதான அருவி மற்றும் பழைய அருவி ஆகிய இரண்டு அருவிகளையும் வனத்துறையினர் வசம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவிகள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இதனிடையே குற்றால அருவி பகுதிகளில் மழை மற்றும் காட்டாற்று வெள்ளத்தை கண்காணிக்க விரைவில் சென்சார் கருவி பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி பேராசிரியர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு, கடந்த 10 நாட்களுக்கு முன்பு அருவிப்பகுதியில் ஆய்வு செய்து இருந்தனர். இந்த குழு தயாரித்த சென்சார் கருவிகளை அருவிகளின் மேற்பகுதியில் பொருத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் கனமழை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில் இந்த சென்சார் கருவி உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.