திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 22 நாட்களில் பக்தர்கள் காணிக்கையாக ஒரு கோடி ரூபாய் செலுத்தி உள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், முருகப்பெருமானின் ஐந்தாவது படை வீடாக கருதப்படுகிறது. இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மலைக்கோயில் மூலவர் முருகப் பெருமானை தரிசனம் செய்துவிட்டு, பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் பணம், நகை ஆகியவற்றை செலுத்தி வருகின்றனர்.
மேலும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலின், உப கோயில்களிலும் பக்தர்கள் பணம், நகை ஆகியவற்றை உண்டியல் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் கிருத்திகைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமைகளில், கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி திருக்கோயில் இணை ஆணையர் ரமணி மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலையில் இன்று கோயில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணிகள் நடைபெற்றது.
இதில் ஏராளமான தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியின் முடிவில் ஒரு கோடியே நான்கு லட்சத்தி ஆயிரத்து 973 ரூபாய் ரொக்கப் பணம், 382 கிராம் தங்கம் மற்றும் 6,715 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உண்டியல் காணிக்கையில் அமெரிக்க டாலர்கள், வெளிநாட்டு பணம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.