மதுரையில் கனமழையால் திடீரென இடிந்து விழுந்த வீடு : உடல் நசுங்கி இளைஞர் பலி

மதுரையில் பெய்த தொடர் மழை காரணமாக வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அடித்த வெயிலின் வெம்மையை கோடை மழை தணித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை மதிச்சியம் பகுதியில் நேற்று இரவு பெய்த தொடர் மழையின் காரணமாக ஒரு வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பாலசுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மதிச்சியம் போலீஸார், பாலசுப்பிரமணியத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர் மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.