கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர்க்கண்காட்சி துவங்கியது – குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 61-வது மலர் கண்காட்சி அரசு அதிகாரிகள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மே மாத சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 61வது மலர் கண்காட்சி இன்று துவங்கி 10 நாட்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதற்காக பிரையண்ட் பூங்காவில் கொல்கத்தா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர் நாற்றுகள் மூன்று கட்டங்களாக நடவு செய்யப்பட்டது. தற்போது பல வண்ணங்களில் பல வகையான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றது.

தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்களால் ஆன சேவல், மயில், 360 டிகிரி செல்ஃபி பாயிண்ட், வீடு, பொம்மைகள், நெருப்பு கோழி, காய்கறிகளில் டிராகன், கொரிலா, டெடி பியர் உள்ளிட்ட உருவங்கள் வடிவமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சியை வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை முதன்மை செயலாளர் அபூர்வா மற்றும் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி மற்றும் தோட்டக்கலை துறை அரசு அதிகாரிகள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.

சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. வழக்கமாக 3 முதல் 5 நாட்கள் மட்டும் நடக்கும் மலர் கண்காட்சி, இந்த ஆண்டு முதல் முறையாக 10 நாட்கள் நடைபெற உள்ளது.சிறுவர்களுக்கு 35 ரூபாயும், பெரியவர்களுக்கு 70 ரூபாயும் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.