தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள நிலையை தமிழகத்தில் கொண்டு வர காங்கிரஸ் கட்சியினர் பாடுபட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.
நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நாமக்கலில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் சித்திக் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டு பேசுகையில், “கட்சியை பலப்பலத்த வேண்டும் என நினைப்பவர்கள் இந்த கட்சியில் பணி புரியலாம். தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள நிலையை தமிழகத்தில் கொண்டு வாருங்கள். அங்கெல்லாம் காங்கிரஸ் ஜெயித்து ஆளும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது. தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியை நாம் ஏன் அத்தகைய நிலைக்கு கொண்டுவரக் கூடாது.
தனிப்பட்ட வெறுப்புகளை கட்சியில் புகுத்தாதீர்கள். நாம் உழைக்கவில்லை. மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை அதனால் தான் நமக்குள் இந்த ஈகோ பிரச்சினை. எங்கள் தலைமுறையில் காங்கிரஸ் கட்சியை ஆளுங்கட்சியாக கொண்டுவர பாடுபட வேண்டும்.
காங்கிரஸ் கட்சி எல்லா மக்களுக்கும் ஏற்ற கட்சியாக உள்ளது. ஆனால் பாஜக, மக்களை குழப்பி இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்தி வருகிறது. ஜூன் 4 ம் தேதி பிறகு காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கும். நாமக்கல்லில் முதன்மை கட்சியாக காங்கிரஸ் வர வேண்டும்” என்றார்.