திடீரென தீப்பிடித்து எரிந்த கார் – திருப்பதியில் தரிசனம் முடிந்து திரும்பிய போது அதிர்ச்சி

திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, திரும்பிய பக்தர்களின் கார் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடு முழுவதும் கோடை வெயில் மக்களை சுட்டெரித்து வருகிறது. அதிகப்படியான வெப்பத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் கார், பைக் போன்ற வாகனங்களும் ஆங்காங்கே தீப்பிடித்து எரிந்து வருகின்றன. இதுபோன்ற சம்பவம், திருப்பதி அருகே நடந்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இளைஞர்கள் 4 பேர், காரில் சென்றுள்ளனர். கோயில் தரிசனம் முடிந்து காரில் அலிபிரி கருடா சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்த போது, காரின் முன்பகுதியில் இருந்து புகை வெளியானது.

இதைத் தொடர்ந்து குபுகுபுவென தீ எரியத் தொடங்கியது. இதைக் கவனித்த ஓட்டுநர், உடனடியாக காரை நிறுத்தி, அனைவரையும் காரை விட்டு இறங்கும்படி எச்சரித்தார். காரில் இருந்த அனைவரும் உடனடியாக இறங்கி உயிர் தப்பினர். இதையடுத்து கண் இமைக்கும் நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது.

 இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து காரை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாகவே கார் தீப்பிடித்ததாக தெரிய வந்துள்ளது.