டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
நாளை காலை 11 மணிக்கு அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிபவ் குமாருக்கு தேசிய மகளிர் ஆணையம் அனுப்பியுள்ள சம்மனில், “எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக வந்த செய்திகளை அடுத்து இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த விவகாரம் தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு நீங்கள் ஆஜராக வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் நேற்று கேஜ்ரிவால் உடன் பிபவ் குமார் லக்னோ விமான நிலையத்துக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த திங்கள்கிழமை அன்று ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யும் டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான ஸ்வாதி மாலிவால், டெல்லி காவல் துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார். அதில் டெல்லி முதல்வரின் அதிகாரபூர்வ இல்லத்தில் அர்விந்த் கேஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளரால் தாம் தாக்கப்பட்டதாக புகார் கூறினார். இதையடுத்து டெல்லி போலீஸார் முதல்வர் கேஜ்ரிவால் வீட்டுக்குச் சென்றனர். இது அரசியல் ரீதியாக அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.