செங்கல்பட்டு அருகே சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த கிரானைட் லாரி மீது ஆம்னி பேருந்து மோதியதில் 4 பயணிகள் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் இருந்து சென்னை பூந்தமல்லிக்கு நேற்று இரவு கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி திடீரென பழுதாகி நின்றது. இந்த நிலையில், திருச்சியில் இருந்து சென்னை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. அதிவேகத்தில் வந்த ஆம்னி பேருந்து சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆம்னி பேருந்தின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கியது.
இதனால் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையே, விபத்தில் சிக்கிய ஆம்னி பேருந்து மீது முசிறியில் இருந்து சென்னைக்கு வந்த அரசு விரைவு பேருந்து மோதியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்துகளில் இருபதுக்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்த விபத்துகள் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களைப் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. சுமார் மூன்று மணி நேரத்திற்கு பிறகே விபத்தில் சிக்கிய வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இதன் பிறகே வாகனங்கள் சென்றன. திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்திற்குள்ளான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.