சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது.
சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவுக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட வழக்கில் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபரை அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறைடு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை வந்தது. அப்போது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது.
பி.எம்.எல்.ஏ. சட்டப்பிரிவு 19ன் கீழ் ஒரு நபர் மீது சந்தேகம் இருந்தாலே அமலாக்கத்துறை கைது செய்ய முடியும்; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ய நீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு சிறப்பு நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது. குற்றம்சாட்டப்பட்டவரை காவலில் எடுக்க விரும்பினால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்ய வேண்டும். காவலில் எடுப்பதற்கான காரணங்கள் பற்றி ஆய்வு செய்து அமலாக்கத்துறை மனு மீது சிறப்பு நீதிமன்றம் முடிவு எடுக்கும். குற்றம் சட்டப்பட்டவரை அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்ப வேண்டுமா? வேண்டாமா? என சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.