செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற இரு விபத்துகளில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும். சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடபழனி அழகிரி நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், சூளைப்பள்ளம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ராஜேஷ் (22), ஏழுமலை (30), யுவராஜ் மற்றும் மற்றொருவர் என மொத்தம் ஐந்து பேர் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்றுள்ளனர். தொடர்ந்து தங்களது காரில் சென்னை திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே வாயலூர் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்த போது மாடு குறுக்கே வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க காரை இடதுபுறமாக திருப்பிய போது சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இதில் காரில் பயணம் செய்த சென்னை சூளைப்பள்ளம் ஏம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ராஜேஷ் (22) ஏழுமலை (30) மற்றும் வடபழனியைச் சேர்ந்த விக்னேஷ் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தைக் கண்ட வாயலூர் பகுதி மக்கள் காரில் சிக்கிக் கொண்டிருந்த மேலும் இருவரை இரும்பு அறுக்கும் இயந்திரம் மூலம் உடைத்து மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த யுவராஜ் (26) மற்றும் மற்றொரு இளைஞரும் உயிரிழந்தனர். தொடர்ந்து 5 பேரின் உடல்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சட்ராஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் இன்று அதிகாலை செங்கல்பட்டு மாவட்டம் சிலாவட்டம் பகுதியில், பண்ருட்டியை நோக்கி சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சமத். இவர் சவுதிக்கு கிளம்பிய நிலையில், அவரை வழி அனுப்ப அவரது மனைவி ஜெய் பினிஷா (40), மகன்கள் மிச்சால் (20), பைசல் (12), மற்றும் மகன் அத்தல் (16) ஆகியோர் சென்னை விமான நிலையம் சென்றிருந்தனர். அவரை வழியனுப்பி விட்டு காரில் பண்ருட்டி திரும்பிக் கொண்டிருந்தனர். காரை ஓட்டுநர் சரவணன் (50) ஓட்டி வந்தார்.
அப்பொழுது முன்னே சென்ற கனரக லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் சரவணன், ஜெய் பினிஷா, மிச்சால், பைசல் ஆகியோர் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அத்தல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இசிஆர் மற்றும் ஜிஎஸ்டி ஆகிய பிரதான சாலைகளில் அடுத்தடுத்து நடந்த இரண்டு விபத்துகளில் 9 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.