மூணாறு வரும் சுற்றுலாப்பயணிகளை குதூகலமாக வரவேற்கும் குல்மோஹர் பூக்கள்

மூணாறு – உடுமலைபேட்டை சாலையில் வழிநெடுக குல்மோஹர் மலர்கள் பூத்து குலுங்கி சுற்றுலாப்பயணிகளை கவர்கின்றன. கோடை சீசனை முன்னிட்டு, கேரள மாநிலம், மூணாறில் சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலாப்பயணிகளை தினமும் வருகை தருகின்றனர். இந்த நிலையில் சுற்றுலாப்பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மூணாறு அருகே உள்ள தலையார், வாகுவாரை, சட்ட மூணாறு, மறையூர் போன்ற பகுதிகளில் செந்நிற குல்மோஹர் மலர்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன.

பச்சை பசேல் என விரிந்திருக்கும் தேயிலை தோட்டங்களுக்கு செந்தூர திலகம் வைப்பது போல மலைச் சாலையின் இருபுறங்களிலும் மலர்ந்து விரிந்து சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து வருகின்றன. உடுமலைப்பேட்டை வழியாக வருபவர்களும், மூணாறில் இருந்து மறையூர் செல்லும் சுற்றுலாப்பயணிகளும் தங்கள் வாகனத்தை நிறுத்தி, பூக்களை பார்த்து ரசித்து, புகைப்படம், செல்பி எடுத்துச் செல்கின்றனர்.