நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபிர் புர்காயஸ்தாவின் கைது செல்லாது : உச்ச நீதிமன்றம்

நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபிர் புர்காயஸ்தாவை கைது செய்து சிறையில் அடைத்தது செல்லாது என்றும், அவரை காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீனாவிடம் இருந்து நிதி உதவி பெற்று, டிஜிட்டல் மீடியா மூலம் தேச விரோதப் பிரச்சாரத்தை பிரபிர் புர்காயஸ்தா ஊக்குவித்ததாக கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். புர்காயஸ்தா, ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார். அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

பிரபிர் புர்காயஸ்தா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) மற்றும் சட்டவிரோத தடுப்புச் சட்டம் (UAPA) ஆகியவற்றின் கீழ் டெல்லி போலீஸார் புர்காயஸ்தாவை கைது செய்துள்ளனர். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்யும்போது, கைதுக்கான காரணத்ததை எழுத்துபூர்வமாக வழங்க வேண்டும். ஆனால், இந்த வழக்கில் எழுத்துபூர்வமாக வழங்கவில்லை. ஜாமீன் கேட்டு மாஜிஸ்திரேட்டிடம் செல்வதற்கு எழுத்துபூர்வமாக ஆதாரம் பெற வேண்டாமா?” என்று வாதிட்டார்

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “இந்த வழக்கில் கைதுக்கான ஆதாரங்களின் நகல் வழங்கப்படவில்லை. எனவே, அவரது கைது செல்லாது. குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யும் முன் அதற்கான ஆதாரங்களின் நகலுடன் எழுத்துபூர்வமாகக் கைது செய்ய வேண்டும் என்று பங்கஜ் பன்சால் வழக்கில் மார்ச் மாதம் அளித்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, பிரபிர் புர்காயஸ்தாவுக்கான ரிமாண்ட் உத்தரவு செல்லாது. பிரபிர் புர்காயஸ்தாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லி போலீஸார் கைது செய்தது சட்டவிரோதமானது. எனவே, அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார். புர்காயஸ்தாவின் கைது மற்றும் காவல் செல்லாது என்பது கண்டறியப்பட்டதால், அவரை காவலில் இருந்து விடுவிக்க வேண்டும். அதேநேரத்தில், அவர் மீது ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அவரை விடுவிக்கும்போது சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு ஜாமீன் பத்திரங்களை வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.