கண்மாயில் விஷத்தைக் கலந்த மர்ம நபர்கள்:செத்து மிதந்த மீன்கள் அதிர்ச்சியில் மக்கள்

விருதுநகர் அருகே முன்விரோதம் காரணமாக, கண்மாயில் விஷம் கலக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் பொன் இருளப்பன். இவர் தமது ஊருக்கு அருகே உள்ள கணபதி சுந்தர நாச்சியார்புரத்தில் அமைந்துள்ள கொசவன் குளம் கண்மாயை 5 ஆண்டுகளுக்கு மீன்பாசி ஏலம் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு ரூ. 1.25 லட்சம் கட்டி மீன்களை வளர்த்து விற்பனை செய்துள்ளார். இந்த ஆண்டு அரசுக்கு சுமார் ஒன்றரை லட்சம் பணம் கட்டியுள்ளார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக ரூ. 70 ஆயிரம் மதிப்பில் சிசி மற்றும் மண்டை கட்லா மீன் குஞ்சுகளை வாங்கி கண்மாய்க்குள் விட்டுள்ளார் இருளப்பன். ஒரு கிலோ வரை வளர்ச்சி காணும் இந்த வகை மீன்கள் தற்போது சுமார் 400 கிராம் வரை வளர்ந்துள்ளது.இந்த நிலையில், இன்று காலை கண்மாயில் மீன்கள் அனைத்தும் செத்து மிதந்ததைப் பார்த்துவிட்டு அதிர்ந்து போயிருக்கிறார் இருளப்பன். மீன்களுக்கு உணவாகும் சிறிய கூனி வகை இறால் குஞ்சுகளும் கரையோரம் செத்து மிதந்ததைக் கண்ட அவர் கண்மாயில் விஷம் கலக்கப்பட்டதை உறுதி செய்தார்.

ஏனெனில் கண்மாயில் தண்ணீர் குறைந்துள்ளதால் இரண்டு கிடங்குகள் உள்ளது. தற்போது ஒரு கிடங்கில் உள்ள மீன்கள் மட்டும் செத்து மிதக்கிறது. அருகே உள்ள கிடங்கில் உள்ள மீன்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. இதனால் முன் விரோதம் காரணமாக யாரோ கண்மாயில் விஷம் கலந்துவிட்டதாக சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இருளப்பன்.கண்மாயில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் தற்போது அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மீன்கள் அனைத்தும் செத்துவிட்டதால் தனக்கு ரூ. 50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறும் பொன் இருளப்பன், கண்மாயில் விஷம் கலந்தவர்களை கைது செய்வதுடன், தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.