பிளஸ் 1 பொதுத்தேர்வில் புதுச்சேரியில் 97.75% மாணவர்கள் தேர்ச்சி

புதுவையில் கடந்த மார்ச் 4-ம் தேதி முதல் 25ந் தேதி வரை பிளஸ் 1 பொதுத்தேர்வு நடந்தது. புதுவை அரசு பள்ளிகளில் கடந்த கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலானது. இதனால், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் தமிழக பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதவில்லை. அதேநேரத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 படித்த மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதினர்.

இதில் புதுவை, காரைக்காலைச் சேர்ந்த 100 பள்ளிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்து 909 மாணவர்கள், 3 ஆயிரத்து 701 மாணவிகள் என மொத்தம் 7 ஆயிரத்து 610 பேர் தேர்வு எழுதினர். தனி தேர்வர்கள் 111, ஏற்கெனவே தேர்வில் தோல்வியடைந்தவர்கள் 201 பேரும் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 3 ஆயிரத்து 772 மாணவர்கள், 3 ஆயிரத்து 667 மாணவிகள் என மொத்தம் 7 ஆயிரத்து 439 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 97.75 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுவையில் மட்டும் 3 ஆயிரத்து 660 மாணவர்கள், 3 ஆயிரத்து 306 மாணவிகள் என மொத்தம் 6 ஆயிரத்து 966 பேர் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 546 மாணவர்கள், 3 ஆயிரத்து 273 மாணவிகள் என மொத்தம் 6 ஆயிரத்து 819 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவையில் மட்டும் 97.89 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். காரைக்காலில் 249 மாணவர்கள், 395 மாணவிகள் என மொத்தம் 644 பேர் தேர்வு எழுதினர். இதில் 226 மாணவர்கள், 394 மாணவிகள் என மொத்தம் 620 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். காரைக்காலில் மட்டும் 96.27 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுவை, காரைக்காலில் 53 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. புதுவையில் மட்டும் 44, காரைக்காலில் 9 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. பாடவாரியாக 179 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழ் 1, பிரெஞ்சு 66, ஆங்கிலம் 1, இயற்பியல் 7, வேதியியல் 4, உயிரியல் 1, கணிப்பொறி அறிவியல் 56, கணிதம் 6, பொருளியல் 13, வணிகவியல் 3, கணக்கு பதிவியல் 6, வணிக கணிதம் 10, கணிப்பொறி பயன்பாடு 5 பேர் என மொத்தம் 179 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.