பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் உச்சம் தொட்டுள்ளது.
பொதுமக்களில் 3 பேரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன்றதில் அப்பகுதி மக்கள் கொதிப்படைந்துள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தின் கீழ் செயல்படும் துணை ராணுவப் படையான பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் அப்பாவி மக்கள் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இதனால் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் விலைவாசியை தணிக்கும் நோக்கில் பாகிஸ்தான் பிரதமர் உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டியதாயிற்று. கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிராந்தியத்தில் பொதுமக்கள் போராட்டம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் அரசு தங்களை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டிய அந்த மக்கள், இந்தியாவுடன் சேர விருப்பம் தெரிவித்தும் போராடி வருகின்றனர். பாகிஸ்தானின் பாராமுகம் காரணமாக அங்கே விலைவாசி கடும் உயர்வு கண்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலை வானுக்கு எகிறியதால், பொதுமக்கள் வாழ்க்கை இயல்பு கெட்டது.
அதிகரித்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற அமைதிப் போராட்டம் வன்முறையில் முடிந்தது. பிராந்தியத்தில் உள்ள திட்டங்களைப் பாதுகாக்க இஸ்லாமாபாத்தால் நியமிக்கப்பட்ட உள்ளூர் காவல்துறை மற்றும் கூட்டாட்சிப் படைகள் ஆகியன எதிர்ப்பாளர்களை கடுமையாக ஒடுக்க முயன்றன. இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். தொடர்ந்து சனியன்று அங்கு நடைபெற்ற வேலைநிறுத்தத்தின்போதும் போலீசார் – பொதுமக்கள் இடையே வன்முறை மோதல்கள் மூண்டன. இருதரப்பு மோதலில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார். பொதுமக்கள் தரப்பில் சுமார் 90 பேர் காயமடைந்தனர்.
இதனையடுத்து இப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க ரேஞ்சர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் முசாபராபாத்தை அடைந்ததும், பொதுமக்களின் எதிர்ப்பை முறியடிக்க முயன்றனர். ஷோரன் டா நக்கா கிராமத்திற்கு அருகே கல் வீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாது கண்ணீர்ப்புகை மற்றும் துப்பாக்கிச்சூடு தொடுத்தனர். இதனையொட்டி முசாபராபாத் – பிரகோட் சாலையில் 3 ரேஞ்சர் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
மக்கள் போராட்டம் தொடர்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் மஜித் கான், அரபு செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசுகையில், ”ரேஞ்சர்கள் கான்வாய் மீது போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக துப்பாக்கிச் சூடுக்கு வழிவகுத்தது. இதனால் பொதுமக்களில் 3 பேர் பலியானார்கள். இரு தரப்பிலும் ஏராளமானோர் காயமடைந்தனர்” என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்ததில், இஸ்லாமாபாத்தில் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தலைமையிலான அவசரக் கூட்டம் நடைபெற்றது. பாகிஸ்தான் கரன்சி மதிப்பில் 23 பில்லியன் ரூபாய் தொகை விடுவிக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியானது. ஆனபோதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பாகிஸ்தானில் போராட்டம் தணியாது தொடர்ந்து வருகிறது.