ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கு : தடயவியல் நிபுணர்கள் தொடர்ந்து தீவிர சோதனை

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் (60) மர்மமாக உயிரிழந்தது தொடர்பான வழக்கில் தடயவியல் நிபுணர்களின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திசையன்விளை அருகே கரைசுத்துப்புதூர் கிராமத்தில் கேபிகே ஜெயக்குமாரின் சடலம் பாதி எரிந்த நிலையில் கடந்த 4-ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. உவரி போலீஸார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிந்துள்ளனர். இந்த வழக்கில் துப்பு துலக்கும் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.சிலம்பரசன் தலைமையிலான 10 தனிப்படையினர் ஈடுபட்டுள்ளனர். சடலம் கண்டெடுக்கப்பட்ட தோட்டத்தில் அங்குலம் அங்குல மாக தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

தற்போது திசையன் விளை பகுதியில் கோடை மழை பெய்து வரும் நிலையில், மழைநீரில் தடயங்கள் அழிந்துவிடும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் அந்த தோட்டத்தில் தீப்பெட்டி ஒன்று கிடந்தது. அந்த தீப்பெட்டி ஜெயக்குமாரின் உடலை எரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். தீப்பெட்டியில் முயல் படம் இடம்பெற்றுள்ளது.

அத்தகைய தீப்பெட்டியை திசையன் விளையில் மொத்தமாக கொள்முதல் செய்து, கடைகளுக்கு விற்பனை செய்யும் வியாபாரியிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்பகுதியிலுள்ள கடைகளுக்கு நேரில் சென்று ஜெயக்குமார் மாயமான நாளில் தீப்பெட்டி வாங்கியவர்களின் விவரங்களை போலீஸார் கேட்டறிந்தனர்.

மேலும் தோட்டத்தில் இருந்து எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்றையும் தனிப்படையினர் கண்டெடுத்துள்ளனர். இந்த டார்ச் லைட் திசையன் விளை பகுதியிலுள்ள ஒரு கடையிலிருந்து வாங்கப்பட்டதாக தெரியவந்ததை அடுத்து, கடையின் உரிமையாளரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.