சுனாமி போன்ற தாக்கத்தை வேலைவாய்ப்பில் ஏஐ ஏற்படுத்தும் : ஐஎம்எஃப் நிர்வாக இயக்குனர்

உலக அளவில் சுனாமி போன்ற தாக்கத்தை வேலைவாய்ப்பு சார்ந்த சந்தையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்படுத்தும் என சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றம் வெகு விரைவில் நடைபெறும் என்றும், அதற்கு மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வளர்ந்த நாடுகளில் இதன் தாக்கம் 60 சதவிகிதம் இருக்கும் என கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.

“இந்த மாற்றத்துக்கு ஏற்ற வகையில் மக்களை தயார்படுத்தவும், வணிக நிறுவனங்களை தயார்படுத்தவும் குறைவான நேரம் மட்டுமே உள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை நாம் சரியாக நிர்வகித்தால் உற்பத்தியை அதிகரிக்க முடியும். அதே நேரத்தில் அது தவறான தகவல்களை பரப்பவும், சமூகத்தில் சமத்துவமின்மையை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. அதில் கவனமாக இருக்க வேண்டும்” என கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.

முன்னணி டெக் நிறுவனங்கள் புதிய மற்றும் அதி சக்தி வாய்ந்த ஏஐ மாடல் வெர்ஷன்களை அறிமுகம் செய்து வருகின்றன. ஓபன் ஏஐ நிறுவனம் ‘ஜிபிடி – 4o’-வை அண்மையில் அறிமுகம் செய்தது. இதே போல கூகுள் நிறுவனமும் தனது ஐ/ஓ நிகழ்வில் ஏஐ சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுகிறது.

கொரோனா தாக்கத்துக்கு பிறகு ரஷ்யா – உக்ரைன் போர் சூழல் இருந்தும் உலக பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது. உலக பொருளாதாரம் மந்தநிலையில் இல்லை என தெரிவித்துள்ள கிறிஸ்டலினா ஜார்ஜீவா, ஆனாலும் இந்த விவகாரத்தில் சில எதார்த்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.