தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள பிளஸ்-1 தேர்வு முடிவுகளில் 96.02 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 4ம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்றது இதில் 8,11,172 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதமாக உள்ளது. மாணவிகள் 94.69 சதவீதம் பேரும், மாணவர்கள் 87.26 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை காட்டிலும் 7.43 சதவீதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த மார்ச் 2023ம் ஆண்டு பொது தேர்வில் தேர்ச்சி விகிதம் 90.93 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அந்த தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் 97.89 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். காரைக்காலில் 96.27% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழில் 8 பேர், ஆங்கிலத்தில் 13 பேர், இயற்பியலில் 696 பேர், தாவரவியலில்2 பேர், விலங்கியலில் 29 பேர், கணினி அறிவியலில் 3,432 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதே போல் கணிதப் பாடத்தில் 779 பேர், வேதியல் 493 பேர், வணிகவியல் 620 பேர், கணக்குப்பதிவியல் 415 பேர், பொருளியல் 741 பேர், கணினி பயன்பாடு 288 பேர், வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்தில் 293 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் 91.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 8021 பேர் தேர்வு எழுதிய நிலையில் 7,54 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 187 சிறைவாசிகள் தேர்வில் பங்கேற்ற நிலையில் 170 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி சதவீதம் 90.90 சதவீதமாக உள்ளது. பிளஸ் 1 தேர்வில் 96.02 சதவீதம் தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது. 95.56 சதவீதம் பெற்று ஈரோடு 2ம் இடமும், 95.23 சதவீதம் தேர்ச்சி உடன் திருப்பூர் மாவட்டம் 3வது இடமும் பெற்றுள்ளது. பிளஸ்-1 தேர்வில் சென்னை மாவட்டம் 91.68 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் 17வது இடத்தில் உள்ளது. 11ம் வகுப்பு தேர்வில் 89.41 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.
பிளஸ் ஒன் தேர்வில் 1,964 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகள் 85.75% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகள் 98.36 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தனியார் சுயநிதி பள்ளிகள் 98.09 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.