புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு துறை சார்ந்த பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழக அரசு பொதுமக்களின் நலனில் கருத்தில் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் குடிநீர் வசதி, மின் வசதி, சாலை வசதி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருகிறது. அந்தவகையில் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு துறை சார்ந்த பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
அதன்படி, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சுனையக்காடு அரசு உயர்நிலைப்பள்ளிகளில், 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு, துணைத் தேர்வுகள் எழுதுவதற்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். மேலும், வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை, பள்ளி மேலாண்மை குழு உள்ளிட்டவைகள் மூலம் மாணவ, மாணவிகளை ஒருங்கிணைத்து பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு பயிற்சி வகுப்பினை ஆசிரியர்கள் கவனமாக நடத்தி, மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் அறுவுறுத்தினார்கள்.
மேலும், சிலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்ட அவர், அடிப்படை வசதிகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் சுகாதார நிலையம் தூய்மையாக பராமரிக்கப்படுவதையும் பார்வையிட்டார். மருத்துவர்கள், செவிலியர்களின் வருகை பதிவேடு மற்றும் மருந்துகளின் இருப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், சுனையக்காடு ஊராட்சியில், ஊரக வளர;ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.34.88 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, 800 மீட்டர் நீளமுள்ள கரம்பக்காடு கிழக்கு குடியிருப்பு முதல் கரம்பக்காடு மயான சாலையின் தரம் குறித்து மாவட்ட ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், சுனையக்காடு ஊராட்சி, பாலையவனம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 10,000 லிட்டர் கொள்ளளவுடைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை 15 நாட்களுக்கு ஒருமுறை தூய்மை செய்யும் பணியினையும் மற்றும் சுனையக்காடு ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் உள்ள குடிநீரில் சரியான அளவு குளோரின் கலக்கப்பட்டிருப்பது குறித்து, மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களால் சோதனை செய்யும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு சுகாதாரமான, சீரான குடிநீர் வழங்கிட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வுகளில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி, துணை இயக்குர் (சுகாதாரப்பணிகள்) மரு.நமச்சிவாயம், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பொறி.பரமசிவம், அறந்தாங்கி வட்டாட்சியர் திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமாரவேலன், பார்த்திபன், உதவித் திட்ட அலுவலர் மணிவாசகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பவானி, பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் இளையராஜா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.