தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் வினோஜ் பி.செல்வம் நேரில் ஆஜராகததால் விசாரணை தள்ளிவைப்பு

திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில், பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் விசாரணைக்கு ஆஜராகததால், விசாரணையை ஜூன் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ள எழும்பூர் நீதிமனறம், அன்றைய தினம், அவர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவரது தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக பயன்படுத்தவில்லை என்று கடந்த ஏப்.13ம் தேதி மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வினோஜ் பி.செல்வம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதை எதிர்த்து அவர் மீது தயாநிதி மாறன் எழும்பூர் நீதிமன்றத்தில், கிரிமினல் அவதூறு வழக்கை தக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “தொகுதி மக்களிடையே தனக்கு உள்ள நற்பெயரை கெடுக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பாஜக வேட்பாளர் பதிவிட்டுள்ளார். உண்மைக்கு புறம்பாக அரசியல் உள்நோக்கத்துடன் எந்த ஆய்வையும் மேற்கொள்ளாமல் அவதூறு பரப்பபும் வகையில் இந்த தகவல் பதிவிடப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதிக்கான நிதி 95 சதவீதத்துக்கு மேல் தொகுதி மக்களுக்கு பல்வேறு திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இதை எதையும் கணக்கில் எடுத்து கொள்ளாமல் வினோஜ் பி.செல்வம் பொய்யான தகவல்களை பதிவிட்டுள்ளார். இது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499, 500ன் கீழ் கிரிமினல் குற்றமாகும். எனவே வினோஜ் பி.செல்வம் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு, எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் நடுவர் எம்.தர்மபிரபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, வினோஜ் பி.செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.சந்திரசேகரன், மனுதாரர் விசாரணைக்கு ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இதற்கு தயாநிதி மாறன் தரப்பு வழக்கறிஞர் விமல் மோகன் எதிர்ப்பு தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட், விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். மேலும், அன்றைய தினம் வினோஜ் பி.செல்வம் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.