“அரசியலிலும் வெற்றி பெறுவேன்” – வேட்புமனு தாக்கல் செய்த கங்கனா நம்பிக்கை

பாஜக சார்பில் இமாச்சல் பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார் நடிகை கங்கனா ரனாவத். அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அதன்பின் அவர் கூறுகையில், “மண்டி மக்களவைத் தொகுதியில் எனது வேட்புமனுவை தாக்கல் செய்தேன். எனது சொந்த மாநிலத்தில் உள்ள இந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது மிகவும் பெருமைக்குரிய விஷயம். நான் திரைத்துறையில் வெற்றி பெற்றுள்ளேன். அரசியலிலும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

மண்டி தொகுதி மக்கள் என் மீது வைத்துள்ள அன்புதான் என்னை இங்கு அழைத்து வந்தது. பல துறைகளில் நமது தேசத்தின் பெண்கள் தடம் பதித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் ராணுவம், கல்வி மற்றும் அரசியலில் தடம் பதித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தேச விரோத மனப்பான்மை நாட்டுக்கு சங்கடம் தரும் வகையில் அமைந்துள்ளது” என வேட்புமனு தாக்கல் செய்த பிறகு அவர் தெரிவித்தார். அவருடன் அவரது தாய் ஆஷா மற்றும் சகோதரி ரங்கோலியும் வந்திருந்தனர்.

இமாச்சலில் உள்ள நான்கு மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது. மண்டி தொகுதியில் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட ராம் ஸ்வரூப் சர்மா வெற்றி பெற்றார். 2021-ல் அவர் தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதீபா சிங் வெற்றி பெற்றார். தற்போது இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விக்ரமாதித்ய சிங் போட்டியிடுகிறார்.