கோவை சிறையில் இருந்து யூடியூபர் சவுக்கு சங்கர், மீண்டும் அரசு மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெண் காவலர்களை இழிவாக பேசியது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீஸார் கடந்த 5ம் தேதி கைது செய்தனர். இதைத்தொடர்ந்து சென்னை, திருச்சி, சேலம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கஞ்சா வைத்திருந்ததாக தேனி போலீஸாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே அவர் மீது மாநில காவல்துறை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தேனியில் கைது செய்யப்பட்டு, கோவைக்கு அழைத்து செல்லும் போது, சவுக்கு சங்கர் இருந்த போலீஸ் வேன் தாராபுரம் அருகே கார் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் சவுக்கு சங்கருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு கையில் மாவுக்கட்டு போடப்பட்டிருந்த நிலையில், அதை மாற்றுவதற்காக இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
சிகிச்சைக்குப் பின்னர் கோவை 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்படுகிறார். சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.