வரிசையில் காத்திருக்காமல் வாக்களிக்கச் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்த நபரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ கன்னத்தில் அறைந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே, குண்டூர் மாவட்டத்தின் தெனாலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இத்தாநகர் வாக்குச் சாவடி ஒன்றில் இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.
அப்போது அங்கு வந்த தெனாலி தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சிவக்குமார் வரிசையில் நிற்காமல் நேராக வாக்களிக்கச் சென்றதாகவும், இதனை எதிர்த்த அங்கிருந்த வாக்காளர் ஒருவர் வரிசையில் காத்திருக்காமல் வாக்களிக்கச் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தததாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த எம்எல்ஏ சிவக்குமார் அந்த வாக்காளரை கன்னத்தில் அறைந்தார். மறுநொடியே பதிலடியாக வாக்காளரும் தன்னை தாக்கிய எம்எல்ஏவை தாக்கினார். இதனால் எம்எல்ஏ உடன் இருந்த அவரது ஆதரவாளர்களும் அந்த வாக்காளரை சரமாரியாக தாக்கினர்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 10 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில் அருகில் இருந்த மற்ற வாக்காளர்கள் சேர்ந்து எம்எல்ஏவின் தாக்குதலை தடுப்பது பதிவாகியுள்ளது. அதேநேரம், எந்த காவலர்களும் மோதலை தடுக்கவில்லை.
எம்எல்ஏவின் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனா கூறுகையில், “எம்எல்ஏ தாக்குதல் நடத்திய சம்பவம் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எம்எல்ஏ உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய குண்டூர் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கத்துள்ளார் .