ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று 4 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள செயின்ட் தெரசா பள்ளி, எம்பிஎஸ் பள்ளி, வித்யாஷ்ரம் பள்ளி மற்றும் மனக் சவுக் பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், பள்ளி குழந்தைகள் உடனடியாக வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
வெடிகுண்டு அகற்றும் படையினர் மற்றும் மோப்ப நாய்கள், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வந்து தீவிர சோதனை நடத்தப்பட்டது. காவல்துறையினர், பள்ளி நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர்.மின்னஞ்சலில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரித்து வருவதாக ஜெய்ப்பூர் போலீஸ் கமிஷனர் பிஜு ஜார்ஜ் ஜோசப் தெரிவித்தார்.
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்சிஆர்) கடந்த 1ம் தேதி கிட்டத்தட்ட 100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல்கள் வந்தன. இந்த சம்பவம் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.இதேபோல் கடந்த 6ம் தேதி அன்று குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள 7 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வந்தன.
வெடிகுண்டு அகற்றும் படையினரின் சோதனை நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.மிரட்டல் மின்னஞ்சல்கள் ரஷ்ய ஐபி முகவரிகளைக் கொண்ட சேவையகங்களிலிருந்து அனுப்பப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. வட மாநிலங்களில் பள்ளிகளுக்கு அடுத்தடுத்து மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வரும் சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.