சென்னையில், மெட்ரோ ரயில் திட்ட உதவி மேலாளரை தாக்கியது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இந்த புகாரின் அடிப்படையில் பாடகர் வேல்முருகனை நேற்று இரவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிரபல பாடகர் வேல்முருகன் சமீபகாலமாக சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த மார்ச் மாதம் குடிபோதையில், சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் வேல்முருகன்.
சென்னை, வளசரவாக்கம் -ஆற்காடு சாலையில் மெட்ரோ பணிகள் நடந்து வருவதன் காரணமாக நேற்று முன் தினம் இரவு தற்காலிகமாக அங்கு தடுப்பு வைத்து ஒரு வழிப்பாதையாக மாற்றி இருக்கின்றனர். அந்த வழியாக நேற்று முன் தினம் இரவு காரில் சென்ற வேல்முருகன் ’எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி எப்படி இப்படி செய்யலாம்?’ என வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடுப்பை மீறி செல்ல முயன்றிருக்கிறார். இந்த பிரச்சினையை சரிசெய்ய வந்த மெட்ரோ ரயில் திட்ட உதவி மேலாளர் வடிவேலு என்பவரையும் ஆத்திரத்தில் தாக்கியுள்ளார். இதனால், காயமடைந்த வடிவேலு இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல்துறையில் வழக்குப்பதிவு செய்திருக்கிறார். இதுகுறித்து, விசாரித்த காவல்துறையினர் நேற்றிரவு அதிரடியாக பாடகர் வேல்முருகனை கைது செய்திருக்கின்றனர்