பலவீனமான, கோழைத்தனமான, நிலையற்ற காங்கிரஸ் ஆட்சியை நாடு விரும்பவில்லை என்று நரேந்திர மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது தெரிவித்தார்.
பிஹார் மாநிலம் முசாபர்பூர் நகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்த தேர்தல் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல், நாட்டின் தலைமையை தேர்ந்தெடுக்கும் தேர்தல், நாட்டின் ஆட்சியை யாருடைய கையில் கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் தேர்தல். பலவீனமான, கோழைத்தனமான, நிலையற்ற காங்கிரஸ் ஆட்சியை நாடு விரும்பவில்லை. கனவில் கூட பாகிஸ்தானின் அணுகுண்டை பார்க்கும் அளவுக்கு இவர்கள் (எதிர்க்கட்சிகள்) பயப்படுகிறார்கள். இந்தியா கூட்டணி தலைவர்களிடம் இருந்து என்ன மாதிரியான அறிக்கைகள் வருகின்றன? பாகிஸ்தான் வளையல் அணியவில்லை என்று கூறப்படுகிறது.
பிஹார் மக்கள் பல தசாப்தங்களாக நக்சலிசத்தின் காயங்களை அனுபவித்து வருகின்றனர். முந்தைய அரசுகள் நக்சலிசத்தை வளர்த்து, மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தின. அதிகப்படியான குற்றச் சம்பவங்கள் மற்றும் நக்சலிசம் காரணமாக பிஹாரில் தொழில்கள் மற்றும் வணிகங்கள் அழிந்தன. காட்டாட்சி கால வாழ்க்கை பயங்கரமானது. லாலு தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் காட்டாட்சி, பிஹாரை பல தசாப்தங்களுக்கு பின்னுக்குத் தள்ளியது. பிஹாரில் சட்டம் ஒழுங்கை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டு வந்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தான். தற்போது நக்சலிசத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கையும் வேகமாக குறைந்து வருகிறது.
10 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் பணவீக்கம் எப்படி இருந்தது? அப்போது, ஒருவர் மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டினால் அதற்கு வருமான வரி கட்டச் சொல்லியது காங்கிரஸ் அரசு. ஆனால், ரூ.50 ஆயிரம் வரை வருமானம் இருந்தால்கூட ஒரு பைசா கூட வரி கட்ட வேண்டியதில்லை என்று சீர்திருத்தம் கொண்டு வந்தது மோடி அரசு. காங்கிரஸ் ஆட்சியில் எல்இடி பல்பின் விலை ரூ.400 ஆக இருந்தது. மோடி அரசு அதன் விலையை ரூ.40-50 ஆக குறைத்தது.
அனைத்து வீடுகளுக்கும் குறைந்த விலையில் எல்இடி பல்புகளை வழங்குவதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின்கட்டணத்தில் ரூ.20 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. உங்களுக்கு இரட்டிப்பு லாபம் ஈட்ட மற்றொரு திட்டத்தை மோடி வகுத்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் உங்கள் மின் கட்டணம் பூஜ்ஜியமாகிவிடும். இந்தத் திட்டத்தின் பெயர் – PM சூர்யாகர் இலவச மின்சாரத் திட்டம். இதன் கீழ் மேற்கூரையில் சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு ரூ. 75 ஆயிரம் அரசு தருகிறது. எவ்வளவு மின்சாரம் தேவையோ, அவ்வளவு மின்சாரத்தை நீங்கள் உபயோகிக்க முடியும், மிச்சம் இருக்கும் மின்சாரத்தை அரசுக்கு விற்று பணமும் ஈட்ட முடியும். அதாவது ஜீரோ மின் கட்டணம் மற்றும் அதனுடன் வருமானம்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.