சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமம் பெறுவதற்கு கடந்த 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விண்ணப்பங்களை உரிய முறையில் பரிசீலித்து உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள், மண்டல வாரியாக அனுமதி பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கடந்த 3 நாட்களில் 2,300 பேர் செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்காக அனுமதி கோரி சென்னை மாநகராட்சியில் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களை உரிய முறையில் பரிசீலித்து அவர்களுக்கு அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த உரிமத்தை ஒவ்வொரு ஆண்டு புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மண்டல வாரியாக வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளையும் சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, 4-வது லேன் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை கடந்த 5-ம் தேதி இரண்டு நாய்கள் கடித்து குதறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பலத்த காயமடைந்த அச்சிறுமி ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பரங்கிமலை காவலர் குடியிருப்பில் சிறுவன் ஒருவரை நாய் கடித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நாய்கள் வளர்க்க உரிமம் கட்டாயம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார். மேலும், செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.