சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு

குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி அங்குள்ள உணவுக் கூடத்தில் சமைத்து சீக்கியர்களுக்கு பரிமாறினார்.

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ந்தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ந்தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. 3-ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து 4-வது கட்டமாக, 96 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து 5-வது கட்டமாக 49 தொகுதிகளில் வருகிற 20-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி பீகார் சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று காலை பாட்னாவில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, பின்னர் அங்குள்ள உணவுக் கூடத்தில் சில உணவுகளை சமைத்தார். அதன்பின் அங்கிருந்த சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார். அப்போது பிரதமர் மோடி ஆரஞ்சு நிற தலைப்பாகை அணிந்திருந்தார். இந்த நிலையில் இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.