சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி அளித்து கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பெண் காவலர்களை இழிவாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை, தேனியில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீஸார் கடந்த 5ம் தேதி கைது செய்தனர். இதைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ளார். தேனியில் இருந்து அவரை கைது செய்து அழைத்து வரும்போது, போலீஸ் வாகனம் விபத்திற்குள்ளானதில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் சிறையில் தன்னை சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் தாக்கியதால் தான் தனது கை உடைந்ததாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் இன்று சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைப்பு வரப்பட்ட சவுக்கு சங்கர், பின்னர் சிகிச்சை முடிந்து கோவையில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். போலீஸார் தரப்பில் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதி சரவணபாபு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸார் தரப்பில் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, ஒரு நாள் மட்டும் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மேலும் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் ஒருமுறை 15 நிமிடங்கள் வழக்கறிஞரை சந்திக்க சவுக்கு சங்கருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். நாளை மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.