உலகளவில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு இருமடங்காக எகிறின அறிவுசார் துறைகள் 75% செயற்கை நுண்ணறிவுக்கு தாவின

 

புதிய அலையென அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடானது, அதன் பயனர்கள் எண்ணிக்கை அடிப்படையில் கடந்த 6 மாதங்களில் இரு மடங்காக உயர்ந்துள்ளது.

சாதாரண கணினி மயத்துக்கே பணியாளர்கள் அலறிய காலம் உண்டு. பணியிடங்கள் கணினி மயமாவது தங்களது வேலைகளை பறிக்கும் என்று அவர்கள் புலம்பித் தவித்தார்கள். அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் அதன் கண்டுபிடிப்புகளுக்கு தடைபோடுவது இயலாதது என்பதால், அந்த எதிர்ப்புகள் காணாமல் போயின. தற்போது நடப்புத் தலைமுறைக்கான மாற்றமாக, செயற்கை நுண்ணறிவு தலையீடு சுனாமியென எழுந்துள்ளது. அதற்கான ஐடி மற்றும் டெக் நிறுவனங்களுக்கு அப்பாலும், செயற்கை நுண்ணறிவு பல்வேறு துறைகளை ஆக்கிரமித்து வருகிறது. ஏராளமான ஊழியர்களின் பணிகளையும் பறித்து வருகிறது.

செயற்கை நுண்ணறிவின் பாய்ச்சலை, மைக்ரோசாப்ட் மற்றும் லிங்க்டு இன் வழங்கியுள்ள ‘பணிகளின் போக்கு குறியீட்டு ஆண்டறிக்கை -2024’ தற்போது உணர்த்தி உள்ளது. இதன்படி கடந்த 6 மாதங்களில் ஏஐ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. மேலும் உலகளாவிய வகையில், 75 சதவீத தொழிலாளர் பணியிடங்களில் செயற்கை நுண்ணறிவு ஆக்கிரமித்துள்ளது.

அதீத வேகம் மற்றும் அதிக வேலை ஆகியவற்றுடன் போராடும் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் ஏஐ நவீனம் மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது. ஆனபோதும் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தை பெருநிறுவனங்கள் உணர்ந்த அளவுக்கு, அதற்கடுத்த நிலையில் உள்ள நிறுவனங்களின் பயன்பாடுகளுக்கு ஏஐ உதவிகள் இன்னமும் நீளவில்லை.

ஏஐ ஒருங்கிணப்பில் தவிர்க்க முடியாத நிலை இருந்தபோதிலும், முதலீட்டின் மீதான உடனடி வருவாயை நிரூபிக்க வேண்டிய அழுத்தம் பல நிறுவனங்களை தயங்கச் செய்கிறது. இதனிடையே, 90 சதவீத ஏஐ பயனர்கள் இது நேரத்தை சேமிக்க பெருமளவு உதவுவதாகவும், 85 சதவீதத்தினர் தங்களின் மிக முக்கியமான பணிகளில் கவனம் செலுத்த முடிகிறது என்றும் ஆய்வில் தெரிவித்துள்ளனர். நிறுவனங்களின் தலைமை தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில், போட்டித்தன்மைக்கு ஏஐ பயன்பாடு தவிர்க்க முடியாதது என 79 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். சுவாரசியமான இன்னொரு தகவல், ஏஐ பயன்பாடு என்பது அதன் பிரத்யேக பயனர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மட்டுமன்றி, அனைத்து துறையினர் மற்றும் சகல வயதினர் மத்தியிலும் இனி ஏஐ பயன்பாடு அதிகரிக்கும் என கணித்துள்ளனர்.

குறிப்பாக அறிவு சார்ந்த பணியில் உள்ளவர்கள் மத்தியில், ’ஜெனரேஷன் இஸட்’ எனப்பட்டும் 18-28 வயதுடைய பயனர்களில் 85 சதவீதத்தினர் ஏஐ பயன்பாட்டை அதிகப்படியாக பின்பற்றுகின்றனர். அதைத் தொடர்ந்து மில்லியனியல்கள் எனப்படும் 29-43 வயதுடையோர் மத்தியில் 78 சதவீதமும், ஜெனரேஷன் எக்ஸ் எனப்படும் 44-57 வயதுப் பிரிவினர் 76 சதவீதத்தினர் ஏஐ பயன்பாடுகளில் திளைத்துள்ளனர். ஆனபோதும் 45 சதவீத ஊழியர்கள் தங்கள் பணியில் ஏஐ தலையீடு குறித்து கவலை தெரிவித்திருக்கிறார்கள். 46 சதவீத ஊழியர்கள் தங்களுக்கான வேறு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் ஏஐ அறிமுகப் பணிகளை தவிர்ப்பது குறித்தும் பரிசீலித்தும் வருகின்றனர். எந்த வகையில் பார்த்தாலும், தற்போது உயர்கல்வி பயில்வோர் மற்றும் பணி நாடுவோர் மத்தியில் ஏஐ என்பது தவிர்க்க இயலாத அம்சமாகி வருகிறது.