திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மூன்று சிறார்கள் உட்பட 9 பேரை போக்சோ வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள், அவரிடம் விசாரித்த போது 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் தன்னை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து, உடுமைலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஜெய காளீஸ்வரன்( 19), மதன்குமார்( 19), பரணி குமார்( 21), பிரகாஷ் (24), நந்தகோபால்( 19 ), பவா பாரதி (22), மற்றும், 14, 15 மற்றும் 16 வயதுடை 3 சிறுவர்கள் உட்பட 9 பேரை கைது செய்தனர். இவர்கள் அனைவருமே உடுமலை பகுதியைச் சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்ட 9 பேரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி, கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் உடுமலை ஏடிஎஸ்பி அலுவலகத்தின் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், உரிய விசாரணைக்கு பின்னரே சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளதாகவும், காவல் துறையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமாறும் கேட்டுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில், கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று போலீஸாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலையில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.