இந்தியாவின் மிகப்பெரும் வர்த்தகப் பங்காளியானது சீனா, அமெரிக்காவை விஞ்சிய அதிசயம்

இந்தியா : இந்தியாவின் பிரதான வர்த்தக பங்காளியாக சீனா மீண்டும் உருவெடுத்துள்ளது.

இந்த வகையில் அமெரிக்காவை வீழ்த்தி சீனா விஸ்வரூபமெடுத்துள்ளது. எல்லையில் சதா தொல்லை அளித்து வரும் சீனா, இந்தியாவின் அங்கமான அருணாசல பிரதேசம் மாநிலத்தில் கணிசமாக ஊடுருவி, ஆக்கிரமிப்புகளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லைக்கு அப்பால் நாட்டின் உள்ளேயும் இன்னொரு திசையிலிருந்து ஊடுருவி இந்தியா முழுக்க தனது வர்த்தகப் பொருட்கள் வாயிலாக சீனா வியாப்பித்துள்ளது. வர்த்தக அடிப்படையில் இந்தியாவுடன் நெருங்கியிருந்த அமெரிக்காவை வீழ்த்திய சீனா, மிகப்பெரும் பங்காளியாக வளர்ந்துள்ளது. குறிப்பாக இந்தியா மற்றும் இந்தியர்களின் எதிர்பார்ப்பு மற்றும் விருப்பத்துக்கு அப்பாலும் இந்த மாற்றம் அரங்கேறி உள்ளது. குளோபல் டிரேட் ரிசர்ச் இனிசியேட்டிவ் அமைப்பின் அண்மை ஆய்வு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவை விஞ்சி, இந்தியாவின் மிகப்பெரும் வர்த்தக பங்காளியாக சீனா தனது நிலையை மீட்டெடுத்துள்ளது . நிறைவடைந்த நிதியாண்டில், சீனாவுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் மொத்தம் 118.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இறக்குமதி 3.24 சதவீதம் அதிகரித்து 101.7 பில்லியன் டாலராகவும், ஏற்றுமதி 8.7 சதவீதம் அதிகரித்து 16.67 பில்லியன் டாலராகவும் இருந்தது.

மாறாக, இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகம் சிறிது சரிவை சந்தித்தது. இருவழி வர்த்தகம் இந்த வகையில் 118.3 பில்லியன் அமெரிக்க டாலராகி உள்ளது. இந்திய ஏற்றுமதி 1.32 சதவீதம் குறைந்து 77.5 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 20 சதவீதம் குறைந்து 40.8 பில்லியனாகவும் உள்ளது.