அண்ணாமலை மீது வழக்கு தொடர அனுமதி பிறப்பிக்கவில்லை என்று கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை கண்டித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பா.ஜ.க. சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணா குறித்து சர்ச்சையாக பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை பேசியதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ்மனுஷ் சேலம் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து இருதரப்பினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அண்ணாமலை மீது வழக்கு தொடர அனுமதி கோரி தமிழக அரசின் பொதுத்துறை செயலாளருக்கு, சேலம் கலெக்டர் கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தை பரிசீலித்த தமிழக அரசு, அண்ணாமலை மீது குற்றவியல் வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில், அண்ணா குறித்து பேசியதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர கவர்னர் ஆர்.என்.ரவி அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு கவர்னர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு கவர்னர் அவர்களால் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு கவர்னர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு கவர்னர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.