முன்னாள் முதல்வர் அண்ணாதுரை குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு தொடர ஆளுநர் மாளிகை அனுமதி அளிக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”1956 ஆம் ஆண்டு, முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பேசினார். கடவுள் பக்தி இல்லாதவர்கள், கடவுள் பக்தி இருப்பவர்களை தவறாக பேசினால் மதுரை மீனாட்சி அம்மனுக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டி இருக்கும் என முத்துராமலிங்க தேவர் எச்சரிக்கை செய்தார். இதனால் பி.டி.ராஜனும், அண்ணாதுரையும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.” என பேசி இருந்தார்.
ஆனால் முத்துராமலிங்க தேவர் அவ்வாறு கூறவில்லை என பத்திரிகைகள் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டன. அண்ணாமலை கூறிய இந்த தகவலுக்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும், இவ்வாறு கட்டுக்கதைகளை கூறி மக்களிடம் கலவரம், மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதாக அண்ணாமலை மீது சேலத்தை சேர்ந்த பியூஸ் மனுஷ் என்ற சமூக ஆர்வலர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் சேலம் ஜேஎம்-4 நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து அண்ணாமலை பேசிய பேச்சு பற்றிய ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதித்துறை நடுவர் யுவராஜ், அண்ணாமலை மீது இரண்டு பிரிவினருக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அரசின் அனுமதியை பெற வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கில் அண்ணாமலை மீது வழக்கு தொடர முகாந்திரம் இருப்பதாக, தமிழக அரசு முடிவு செய்தது. வழக்கு தொடர்வதற்கான அனுமதி கோரி ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. இந்த நிலையில் இந்த பரிந்துரையின் பேரில் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்ய ஆளுநர் மாளிகை அனுமதி அளித்துள்ளதாக நேற்று பல்வேறு செய்தி தளங்களில் தகவல் வெளியாகியிருந்தது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’கடந்த இரண்டு நாட்களாக செய்திகளில் பரவி வரும் ஒரு தகவல் குறித்து பலரும் ஆளுநர் மாளிகைக்கு தகவல் தெரிவித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் மாளிகை அனுமதி அளித்துள்ளதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக ஆளுநர் மாளிகைக்கு எவ்வித தகவலும் வரவில்லை. ஆளுநர் மாளிகை இது தொடர்பாக எந்த ஒப்புதலையும் அளிக்கவில்லை’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.