போலந்தில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலானதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.
போலந்து தலைநகர் வார்ஷாவில் மேரிவில்ஸ்கா 44 என்ற பெயரிலான மிகப்பிரமாண்டமான ஷாப்பிங் சென்டர் உள்ளது. அந்நாட்டின் மிகப்பெரியதான அந்த வணிக வளாகத்தில் 1,400க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்குள்ள ஒரு கடையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதை உடனடியாக கட்டுப்படுத்த முடியாததால் அது மளமளவென அடுத்தடுத்த கடைகளுக்கும் விரைவாக பரவியது. இதனால் அங்கிருந்த கடைகள் அனைத்தும் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்தது. அந்தக் கடைகளில் இருந்து வெளியேறிய கரும்புகை காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. அங்குள்ள கடைகளில் பணியில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறியதால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் 80 விழுக்காடு கடைகள் அதாவது 1000 த்துக்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலுமாக தீயில் எரிந்து சாம்பலாயின. தகவல் அறிந்து நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 200 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சென்று வணிக வளாகத்தின் பல்வேறு திசைகளில் இருந்தும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன