மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதால் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதால், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது. “கேஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நேர்மையானது. எனினும், அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க சட்டப்பூர்வ உரிமை இல்லை. டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா விரும்பினால் நடவடிக்கை எடுக்கலாம். நாங்கள் தலையிட மாட்டோம்” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மக்களவை தேர்தல் 2024ஐ முன்னிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. இந்த பின்னணியில் தற்போதைய தீர்ப்பு வந்துள்ளது.
முன்னதாக, கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, கேஜ்ரிவாலை ஜூன் 2ஆம் தேதி சரணடைய உத்தரவிட்டதுடன், ஜாமீன் பெறுவதற்கான நிபந்தனையாக முதல்வர் அலுவலகம் மற்றும் டெல்லி செயலகத்துக்கு செல்ல தடை விதித்தது.
பஞ்சாபில் மொத்தமுள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி, டெல்லியில் காங்கிரஸ் கூட்டணியில் 4 இடங்களில் போட்டியிடுகிறது. உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் காரணமாக, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், டெல்லி மற்றும் பஞ்சாபில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வாய்ப்பு உருவானது.
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் கடந்த மார்ச் 21 அன்று கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை இயக்குநரகம் அவரை கைது செய்து. தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கேஜ்ரிவால் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.