ஜம்மு காஷ்மீரில் கோயிலுக்கு சாலை அமைக்க நிலத்தை தானமாக அளித்த இரு இஸ்லாமியர்கள்

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான கோயிலுக்கு சாலை அமைக்கும் வகையில் தங்களது நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர் இரு இஸ்லாமியர்கள். அவர்களது இந்தச் செயல் மத நல்லிணக்கத்துக்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

ரியாசியில் அமைந்துள்ள குப்த் காசி – கௌரி சங்கர் கோயிலுக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லாமல் இருந்துள்ளது. இந்த நிலையில், கேரல் ஊராட்சியில் வசித்து வரும் குலாம் ரசூல் மற்றும் குலாம் முகமது ஆகிய இருவரும், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்களது நிலத்தை சாலை அமைக்க தானமாக வழங்கியுள்ளனர். இதன் பரப்பளவு சுமார் அரை ஏக்கர்.

இதன் மூலம் அந்தக் கோயிலுக்கு செல்ல 10 அடி அகலத்துக்கு சுமார் 1,200 மீட்டர் தூரம் சாலை அமைக்கப்பட உள்ளது. பஞ்சாயத்து வசம் உள்ள நிதியை கொண்டு சாலை அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “அந்தக் கோயிலுக்கு முறையான சாலை வசதி இல்லை. அந்தப் பிரச்சினையை காரணம் காட்டி சமூகத்தில் பிளவு ஏற்படுத்த சிலர் முயற்சி செய்தனர். தொடர்ந்து உள்ளூரில் கூட்டம் நடந்தது. அதில்தான் சாலை அமைக்க எங்களது நிலத்தை வழங்குவதாக தெரிவித்தோம்” என குலாம் ரசூல் தெரிவித்தார்.