இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் 2014ல் கிடைத்தது : கங்கனா ரனாவத் பேச்சு

கடந்த 2014ல் தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்றும், இந்தியாவை, ‘இந்து ராஷ்டிரமாக’ காண விரும்புவதாகவும் நடிகைகங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகையும், இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதி பாஜக வேட்பாளருமான கங்கனா ரனாவத், அங்குள் குலுவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கங்கனா, “நம் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக முகலாயர்களின் கீழும், அதைத்தொடர்ந்து ஆங்கிலேயர்களிடமும் அடிமைத்தனத்தை அனுபவித்தனர். 1947ல் நாடு ஆங்கிலேயர்கள் ஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, பல தசாப்தங்களாக காங்கிரஸின் தவறான ஆட்சியில் சிக்குண்டது. நாடு உண்மையான சுதந்திரத்தை 2014ல் பெற்றது (நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற ஆண்டு).

இது சிந்திப்பதற்கு மட்டுமல்ல; சனாதனத்துக்கான சுதந்திரத்தையும் அளித்தது. இது இந்தியாவை ஒரு இந்து ராஷ்டிரா-வாக (இந்து தேசம்) ஆக்கும் நோக்கத்தை முன்னோக்கி அச்சமின்றி பின்பற்றவும், சொந்த மதத்தை பறைசாற்றவும் எங்களுக்கு சுதந்திரம் அளித்தது.

1947ம் ஆண்டில் நடந்த பிரிவினை, பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உருவாக்கத்துக்கு வழிவகுத்தபோது, இந்தியா ஏன் இந்து தேசமாக அறிவிக்கப்படவில்லை? இந்தியாவை இந்து தேசமாக மாற்ற நாங்கள் பணியாற்றுவோம்” என்றார்.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 4 மக்களவைத் தொகுதிகள் மற்றும் அம்மாநிலத்தில் காலியானதாக அறிவிக்கப்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வரும் ஜூன் 1ம் தேதி நடைபெறும் 7வது கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மண்டி தொகுதியில் கங்கனாவை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் மகன் விக்ரமாதித்யா சிங் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.