வருண் காந்திக்கு சீட் மறுப்பு “அது கட்சி எடுத்த முடிவு” : மேனகா காந்தி கருத்து

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வருண் காந்திக்கு இம்முறை வழங்கப்படாதது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவரது தாயாரும், சுல்தான்பூர் தொகுதி பாஜக வேட்பாளருமான மேனகா காந்தி, ‘நான் மகிழ்ச்சியாக இருந்தேன் என்று சொல்ல முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள மேனகா காந்தி, “எனது தேர்தல் பிரச்சாரங்களில், நான் எப்போதும் உள்ளூர் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே பேசுவேன். தேசிய பிரச்சினைகளை விட இதுதான் மக்களுக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. எனது தேர்தல் பிரச்சாரத்தில், தொகுதிக்கு இதுவரை செய்த மற்றும் செய்யப்போகும் பணிகளைப் பற்றி நான் பிரச்சாரம் செய்கிறேன். வருண் காந்தியின் ‘கர்மபூமியாக’ பிலிபித் நீடிக்குமா என்று கேட்கிறீர்கள். இந்த நேரத்தில், இந்தியா அவரது ‘கர்மபூமி’. நாடு முழுவதற்கும் அவர் வேலை செய்யட்டும்.

வருண் காந்திக்கு தேர்தலில் போட்டியிட இம்முறை வாய்ப்பு வழங்கப்படாத விவகாரத்தைப் பொறுத்தவரை அது கட்சி எடுத்த முடிவு. நான் மகிழ்ச்சியாக இருந்தேன் என்று சொல்ல முடியாது. ஆனால், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாவிட்டாலும் வருண் காந்தி சிறப்பாக செயல்படுவார் என்று நான் நம்புகிறேன். அவர் தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும். ஆனால் கட்சி ஒரு முடிவை எடுத்துள்ளது, அவ்வளவுதான்” என்று தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூர் தொகுதியின் எம்.பி.,யான மேனகா காந்திக்கு அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பாஜக வழங்கி உள்ளது. அதேநேரத்தில், உத்தர பிரதேசத்தின் பிலிபித் தொகுதியின் எம்பியான வருண் காந்திக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.