சிவகாசி அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

சிவகாசி அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில்  கட்டிடம் முற்றிலுமாக இடிந்து நொறுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள  பட்டாசு ஆலையில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 அறைகள் தரைமட்டமானது. இந்த விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 15 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதி உதவியும் அறிவித்துள்ளார். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெடி விபத்தில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த கொடூர வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின்  குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சிவகாசியில் இன்று அதிகாலை மேலும் ஒரு பட்டாசு  ஆலையில் வெடி விபத்து நடந்துள்ளது. சிவகாசி அருகே உள்ள நாரணாபுரம் கிராமத்தில் இயங்கி வரும் மகேஸ்வரி பட்டாசு ஆலையில்  நேற்று உற்பத்தி முடிந்து தொழிலாளர்கள் அனைவரும் வீடு திரும்பி விட்டனர். இரவு பணி நடைபெறவில்லை. இன்று காலை அவர்கள் பணிக்கு திரும்ப இருந்தனர். 

இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் திடீரென ஆலையில் உள்ள ஒரு அறை தீப்பிடித்து எரிந்தது. அதில் அறையில் உள்ள பட்டாசுகள் வெடித்துச் சிதறி அந்த அறை முற்றிலுமாக இடிந்து நொறுங்கியது. 

இதுகுறித்து  தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். தொழிலாளர்கள் பணிக்கு வருவதற்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டு தீயும்  அணைக்கப்பட்டு விட்டதால் உயிரிழப்புகள் ஏதுமில்லை. இதுகுறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வெடிவிபத்து நடந்து அதில் பத்து உயிர்கள் பலியாகி இரு தினங்களேயான நிலையில்  அடுத்து ஒரு விபத்து நடந்துள்ளது சிவகாசி மக்களை மட்டுமல்லாது  ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. எத்தனை உயிர்கள் பறிபோனாலும் ஆலை அதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வும் எச்சரிக்கையும் இருந்தால் ஒழிய இத்தகைய  விபத்துகளைத் தவிர்க்க இயலாது.