பிரதமர் மோடியும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பாஜகவும், பிஜேடியும் ஒருவருக்கொருவர் கூட்டாளிகள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஒடிசா சென்றுள்ளார். இந்தநிலையில் காங்கிரஸ் கட்சின் ஊடகப் பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒடிசா செல்லும் பிரதமருக்கு எங்களது கேள்விகள் என்று நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “ந-வீன் மற்றம் ந-ரேந்திரா ஆகியோர் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். பிரதமர் மோடி ஏன் பிஜு ஜனதா தளம் கட்சியுடனான பாஜகவின் நிலைப்பாடு பற்றி பொய் சொல்லவேண்டும்? பாலசோர் ரயில் விபத்துக்கு பின்னர் ஏன் எந்த மாற்றமும் நிகழவில்லை? பழங்குடி மக்களின் வன உரிமைகளை பாஜக பலவீனப்படுத்தியது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் தனது நீண்ட பதிவில், “இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொகுதி பங்கீடு குறித்து பாஜக மற்றும் பிஜேடிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை ஏற்கெனவே அறிந்தவைகளையே உறுதிப்படுத்தின. இரண்டு கட்சிகளும் வெளிப்படையாக எதிரெதிராக இருப்பதாகக் கூறினாலும், அவை ஒன்றுக்கொன்று கூட்டாளிகளாகவே உள்ளன.
பிஜு ஜனதா தளம் கட்சி எம்.பி.,க்கள் கடந்த பத்து ஆண்டுகளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜகவை காப்பாற்றும் வேலையையே செய்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் உட்பட அனைத்து சர்ச்சைக்குரிய மசோதா தாக்கலின் போதும் அக்கட்சி ஆதரவளித்துள்ளது. பாஜகவைச் சேர்ந்த அஸ்வின் வைஷ்ணவ் மாநிலங்களை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவதற்கு பிஜேடி உதவியுள்ளது.
இதற்கு பிரதி உபகாரமாக பாஜக தனது பங்குக்கு மோடி அரசாங்கம் பிஜு ஜனதாதளம் ஆட்சி செய்யும் ஒடிசாவுக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் சந்திக்கும் அனைத்து சிக்கல்களில் இருந்தும் விதிவிலக்கு அளித்திருந்தது. அதாவது அம்மாநிலத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை சோதனைகளோ, விசாரணைகளோ, ஆளுநர் தலையீடுகளோ இல்லை. பிஜேடியுடனான தனது கட்சியின் நிலைப்பாட்டை பிரதமர் விளக்க முடியுமா? இதற்கு பெயர் உறவா அல்லது கூட்டணியா?
பாலசோர் ரயில் விபத்துக்கு பின்னரும் எதுவும் ஏன் மாறவில்லை? கடந்த ஆண்டு பாலசோரில் மூன்று ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 293 பேர் உயிரிழந்தனர். 1,000க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கு மூன்று ரயில்வே அதிகாரிகள் பொறுப்பேற்றுக் கொண்ட போதிலும் இந்த விபத்தில் மத்திய அரசின் பங்கினை யாரும் மறுக்க முடியாது. இந்திய ரயில்வே அதிக அளவில் ஆள்பற்றாக்குறையால் திணறிவருகிறது.
பாதுகாப்பு பிரிவில் 1.7 லட்சம் பணியிடங்கள் உள்ளிட்ட ரயில்வேயில் 2.74 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதை ஆர்டிஐ தகவல் மூலம் ரயில்வே நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி 30 லட்சம் அரசு வேலை வாய்ப்புகளை வழங்கும் என வாக்குறுதி அளித்துள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு (யுபிஏ) அரசு கொண்டு வந்த வன உரிமைகள் சட்டம் பழங்குடியின சமூகத்துக்கு வழங்கிய உரிமைகளை எல்லாம் மோடி அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ள காடுகள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் பறித்துள்ளது. இந்தப் புதியச் சட்டம் 2006-ம் ஆண்டு வன உரிமை சட்டத்தை சிறுமைப்படுத்துவதுடன், உள்ளூர் சமூகங்களின் ஒப்புதலுக்கான தேவையை நீக்குவதுடன், பரந்த அளவில் காடுகளை அழிப்பதற்கான பிற சட்டரீதியான தேவைகளை இல்லாமல் செய்கிறது. இதன் உள்நோக்கம் நமது காட்டு வளங்களை பிரதமரின் கார்ப்பரேட் நண்பர்களுக்கு வழங்குவது மட்டுமே” என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.