பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சார பேச்சுகளில் விஷயம் எதுவும் இல்லை என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
மராட்டிய மாநிலம் நந்தர்பார் மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கோவால் பட்வியை ஆதரித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;- “பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரம் முழுவதும் வெறும் வெற்று பேச்சுதான். அதில் விஷயம் எதுவும் இல்லை. பழங்குடி மக்களின் கஷ்டங்களை புரிந்து கொள்வதற்காக அவர்களின் வீடுகளுக்கு பிரதமர் மோடி சென்ற ஒரு புகைப்படத்தை யாராவது காட்ட முடியுமா?
பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கவோ, அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கவோ அனுமதிக்கப்படவில்லை. பழங்குடி மக்களுக்கு உண்மையில் மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில் பிரதமர் மோடி பின்வாங்கி விடுகிறார்.
தன்னைப் பற்றி அவதூறு கூறப்படுவதாக குழந்தை போல் பிரதமர் மோடி அழுகிறார். இது பொது வாழ்க்கை. இந்திரா காந்தியிடம் இருந்து அவர் கற்றுக்கொள்ள வேண்டும். காளிதேவியைப் போன்ற பெண்ணான அவர், பாகிஸ்தானை இரண்டாக உடைத்தார். அவருடைய தைரியம் மற்றும் உறுதியிலிருந்து பிரதமர் மோடி கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இந்திரா காந்தியை தேச விரோதி என்று அழைக்கும் பிரதமர், அவரிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளப் போகிறார்?” என்று பிரியங்கா காந்தி பேசினார்.