‘புல்வாமா பதிலடித் தாக்குதல்’ உண்மையிலேயே நடந்ததா? -சர்ச்சை கிளப்பும் தெலங்கானா முதல்வர்

‘2019, புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியாவின், பாகிஸ்தான் மீதான பாலகோடு பதிலடி தாக்குதல் உண்மையிலேயே நடந்ததா என்பது எவருக்கும் தெரியாது’ என்று அடுத்த சர்ச்சைக்கு கொளுத்திப் போட்டிருக்கிறார் தெலங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி.

அண்மையில் காங்கிரஸ் கட்சியின் மணிசங்கர் ஐயர் பேசிய பழைய வீடியோவை முன்வைத்து பாஜக புதிய சர்ச்சையை கிளப்பியது. பாகிஸ்தானின் அணுஆயுத இருப்பை சுட்டிக்காட்டி அதற்கு மரியாதை செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்து அந்த வீடியோவில் அவர் பேசியிருந்தார். இந்த வீடியோ தேர்தல் களத்தில் காங்கிரஸ் தரப்புக்கு சேதாரம் சேர்த்தது.

இந்த வரிசையில் தற்போது தெலங்கானா காங்கிரஸ் முதல்வரான ரேவந்த் ரெட்டி, 2019 தேர்தலில் பாஜகவை ஆட்சியில் அமர்த்திய புல்வாமா பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதற்கு எதிரான பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ரேவந்த் ரெட்டி, ‘40 உயிர்கள் பலியான சிஆர்பிஎஃப் கான்வாய் மீதான புல்வாமா தாக்குதல் மற்றும் அதைத்தொடர்ந்த இந்தியாவின் விமானப்படை பாகிஸ்தானில் ஊடுருவி மேற்கொண்ட தாக்குதல்களின் அரசியல் பலன்களை பிரதமர் நரேந்திர மோடி அறுவடை செய்ய முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

”மோடிக்கு எல்லாமே அரசியல்தான்; எல்லாமே தேர்தலில் வெற்றி பெறுவதுதான். அவருடைய அந்த போக்கு நாட்டுக்கு நல்லதல்ல. மோடி மற்றும் பாஜகவை ஒழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதன் பதிலடியான இந்திய விமானப்படையில் பாகிஸ்தான் எல்லைக்குள்ளான தாக்குதல் ஆகியவற்றிலிருந்து அரசியல் மற்றும் தேர்தலுக்கான நேரடி நன்மைகளை மோடி பெற முயன்றார்.

அவரிடம் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலை ஏன் நடக்க அனுமதித்தீர்கள்? நீங்கள் கூறியதுபோல வான்வழித் தாக்குதல் நடந்ததா என்பது குறித்து எவருக்கும் உறுதியாகத் தெரியாது. அதுவே உங்கள் இடத்தில் நாங்கள் இருந்திருப்பின் உள்நாட்டுப் பாதுகாப்பில் கோட்டை விட்டிருக்க மாட்டோம்” என்று ரேவந்த் ரெட்டி கூறினார்.

இதே போன்று மூத்த காங்கிரஸ் தலைவரான வீரப்ப மொய்லியும், புல்வாமா தாக்குதல் குறித்து முன்னதாக கேள்வி எழுப்பியிருந்தார். முன்னாள் பாஜக தலைவரும், பாஜக ஆட்சிக்காலத்தில் பல்வேறு மாநிலங்களில் கவர்னராக இருந்தவருமான சத்யபால் மாலிக், புல்வாமா தாக்குதல் குறித்து எழுப்பிய சந்தேகங்களை வீரப்ப மொய்லி தன் பங்குக்கு எதிரொலித்தார்.

அதையே மேற்கோள்காட்டி புல்வாமா தாக்குதலை தொடர்ந்த இந்தியாவின் வான்வழித் தாக்குதல்கள் போலியானது என்று தெரிவித்திருந்தார். இந்த வரிசையில் மற்றொரு காங்கிரஸ் தலைவரான ரேவந்த் ரெட்டி, மோடி மற்றும் பாஜகவுக்கு எதிராக குற்றம் சாட்டியுள்ளார்.