தேர்தல் பிரசாரத்தில் ஒய்எஸ்ஆர் காங். வேட்பாளர் மீது கல்வீச்சு திருப்பதியில் பரபரப்பு

திருமலை: திருப்பதி அருகே தேர்தல் பிரசாரத்தின்போது ஆளுங்கட்சி எம்எல்ஏவான ஒய்எஸ்ஆர் காங். வேட்பாளர் மீது கல்வீச்சு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவில் வரும் 13ம்தேதி சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஒரேகட்டமாக நடக்கிறது. இதற்கான பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது. இந்நிலையில், நேற்று திருப்பதி அருகே தேர்தல் பிரசாரத்தில் கல்வீச்சு நடந்தது.

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சட்டமன்ற தொகுதி ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருப்பவர் மதுசூதனரெட்டி. இவருக்கு தற்போது மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவரை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் பொஜ்ஜல கோபால கிருஷ்ணரெட்டியின் மகன் சுதிர்ரெட்டி போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறத இந்நிலையில் கடந்த மாதம் வேட்பாளர் சுதிர்ரெட்டி பிரசாரம் செய்தபோது அங்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் கத்தி மற்றும் கற்களுடன் நுழைந்தார். அவரை தெலுங்கு தேசம் கட்சியினர் விரட்டியடித்தனர். இந்நிலையில் காளஹஸ்தி அருகே உள்ள ஏர்ப்பேடு பகுதியில் நேற்று மதுசூதனரெட்டி பிரசாரம் செய்தார். அவரை ஆதரித்து மாநில பிற்படுத்தப்பட்டோர் உரிமை போராட்ட தலைவர் கிருஷ்ணய்யா திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் பிரசார ஜீப்பின் பின்பகுதியில் நின்றபடி எம்எல்ஏவும் வேட்பாளருமான மதுசூதனரெட்டி மீது கல்வீசினார்.

ஆனால் அந்த கல் கிருஷ்ணய்யாவின் முதுகில் விழுந்தது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. எம்எல்ஏ காயமின்றி தப்பினார். அதற்குள் கல் வீசிய நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதனிடையே சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் மீது கல்வீச்சு நடந்தது. இதேபோல் சந்திரபாபு மற்றும்பவன் கல்யாண் ஆகியோரது கூட்டங்களிலும் கல்வீச்சு நடந்தது குறிப்பிடத்தக்கது.