அட்சய திருதியையொட்டி, கும்பகோணம் வட்டம் பெரியக் கடைத் தெருவில் 12 பெருமாள் கருட சேவை நடைபெற்றது.
ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3-வது திதியான அட்சய திருதியையொட்டி கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோயில்களிலிருந்து 12 கருட வாகனங்களில் பெருமாள் பக்தர்களுக்குக் காட்சி அளிப்பது வழக்கம். நடப்பாண்டுக்கான கருட சேவை இன்று நடைபெற்றது. கும்பகோணம் டி.எஸ்.ஆர். பெரிய தெருவில், கருட வாகனங்களில் உற்சவ பெருமாள் சுவாமிகள், அங்கு அமைக்கப்பட்டுள்ள அலங்கார பந்தலில் ஒரே இடத்தில் எழுந்தருளி பொதுமக்களுக்கு அருள்பாலித்தனர்.
இதில், சாரங்கபாணி சுவாமி, சக்கரபாணி சுவாமி, ராமசுவாமி, ஆதிவராக சுவாமி, ராஜகோபால சுவாமி, கொட்டையூர் நவநீத கிருஷ்ணசுவாமி, மேலக்காவேரி வரதராஜ பெருமாள் சுவாமி, அகோபிலமடம் லட்சுமி நரசிம்ம சுவாமி உள்ளிட்ட 12 கோயில்களின் உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்திலும், எதிரில் ஆஞ்சநேயர் எழுந்தருளியவுடன் அந்த பெருமாளுக்கு முன்பு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோர் காலை முதல் பகல் 1 மணி வரை அலங்கார பந்தலில் பெருமாள் வீற்றிருந்து அருள்பாலித்தனர்.
இந்த 12 பெருமாள் சுவாமிகளையும் ஒரு சேர, ஒரே இடத்தில் கருட வாகனத்தில் தரிசனம் செய்வது மிகவும் விசேஷம் என்பதால் ஏராளமானோர் தரிசனம் மேற்கொண்டு வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளைக் கும்பகோணம் காசுக்கடை தர்ம வர்த்தகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.